இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்ப முடியாதது ஏன்? அமெரிக்கா விளக்கம்


இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்ப முடியாதது ஏன்? அமெரிக்கா விளக்கம்
x
தினத்தந்தி 15 July 2021 1:17 AM GMT (Updated: 15 July 2021 1:17 AM GMT)

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்க முடியாதது ஏன் என்பது குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்தது.

வாஷிங்டன்,

தனது கையிருப்பில் இருந்து இந்தியா உள்பட உலகம் முழுவதும் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள இருப்பதாக அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. சமீபத்திய வாரங்களில் அமெரிக்க தடுப்பூசிகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காளதேசம் என உலகின் பல நாடுகளுக்கு போய்ச் சேர்ந்துள்ளன. ஆனால் அமெரிக்க தடுப்பூசி இந்தியாவுக்கு வரவில்லை.

இதன் பின்னணி குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

தடுப்பூசி நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான சட்ட விதிகளை ஆய்வு செய்வதற்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதாக இந்திய அரசு கூறி இருக்கிறது.

இந்திய அரசிடம் இருந்து எங்களுக்கு பச்சை விளக்கு காட்டி விட்டால், நாங்கள் விரைவாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்க தயாராக உள்ளோம்.

தடுப்பூசிகளை நாங்கள் அனுப்பி வைப்பதற்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தனக்குரிய உள்நாட்டு செயல்பாட்டு, ஒழுங்குமுறை, சட்ட நடைமுறைகளை செய்து முடிக்க வேண்டும்.

அந்த வகையில் தான் இந்தியாவும் சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளது. இந்தியாவின் சட்ட நடைமுறைகள் முடித்த பின்னர், நாங்கள் விரைவாக தடுப்பூசிகளை அனுப்பி வைப்போம். தடுப்பூசிகளின் உலகளாவிய வினியோகம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கோவேக்ஸ் அமைப்புடனான இந்தியாவின் விவாதத்தின் நிலை குறித்து நீங்கள்தான் (நிருபர்கள்) இந்தியாவிடம் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். தடுப்பூசி வழங்கலை கோவேக்ஸ் அமைப்பு எளிதாக்குகிறது.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்குகிறோம். இதுவரை உலகளவில் 4 கோடி தடுப்பூசிகளை வழங்கி உள்ளோம்.

இந்தியாவின் மருந்துவத்துறை வலுவானது. நல்ல கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டது. சில காலமாக உலகளாவிய பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்க நிறுவனங்கள், தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள தங்கள் சகாக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story