சீனாவின் சவால்களை சமாளிக்க ‘ஈகிள்’ சட்டம் - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்


சீனாவின் சவால்களை சமாளிக்க ‘ஈகிள்’ சட்டம் - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
x
தினத்தந்தி 16 July 2021 9:45 PM GMT (Updated: 16 July 2021 9:45 PM GMT)

சீனாவின் சவால்களை சமாளிக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான கூட்டுறவை வலுப்படுத்தவும், ‘ஈகிள்’ சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அங்கு செயற்கைத் தீவுகளை உருவாக்கி, ராணுவ தளங்களை அமைத்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தென்பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்கும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு உள்பட உலகளாவிய அமெரிக்க தலைமையும், ஈடுபாட்டையும் உறுதி செய்யக்கூடிய ‘ஈகிள்’ சட்டத்துக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோக்குன் காஸ்ட்ரோ கூறுகையில், “மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏவுகணை மற்றும் அணு ஆயுத தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்குகிறது. இதை தடுக்க ஆயுதங்கள் அழிப்பு சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Next Story