கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு


கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு
x
தினத்தந்தி 18 July 2021 1:26 AM GMT (Updated: 18 July 2021 1:26 AM GMT)

கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சா்வதேசப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பாரிஸ்,

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை, இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசி, பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோா் செலுத்தியிருக்க வேண்டிய கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பெயர் அதில் இடம்பெறாததால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்திய அரசு சார்பில் இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களையும் அனுமதிக்க பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சம்மதித்த நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டு அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமத்திக்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஸ்ட்ரா செனகாவால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதே நேரம், டெல்டா வகைக் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story