1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழை - 25 பேர் பலி


1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழை - 25 பேர் பலி
x
தினத்தந்தி 21 July 2021 12:04 PM GMT (Updated: 22 July 2021 5:13 AM GMT)

சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 25 பேர் பலியாகினர். சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

பீஜிங்,

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் பருவங்கள் மொத்தமாக மாறி புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

அண்மையில் மேற்கு ஐரோப்பியாவில் வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இந்தநிலையில் சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய மாகாணம் ஹெனானில் உள்ள ஷெங்ஜோ நகரில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 624 மி.மீ. மழை பெய்தது. இதில் மாலை 4 முதல் 5 மணி வரையிலான ஒரு மணிநேரத்தில் மட்டும் 201.9 மி.மீ., மழை பெய்தது.மொத்தமாக கொட்டிய இந்த பேய் மழையால் ஷெங்ஜோ நகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மிதக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அதேபோல் அங்குள்ள சுரங்க ரெயில்பாதையிலும் வெள்ளநீர் புகுந்ததால் பயணிகள் வெள்ளத்தில் மூழ்கியவாறு ரெயிலில் நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

ரெயிலில் சிக்கிய அந்த பயணிகள் கயிறு மூலம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.‌

ஷெங்ஜோ நகரில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.‌

சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரங்க ரெயில் பாதைகளில் வெள்ள நீர் புகுந்ததால் ரெயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும் பேய் மழை காரணமாக ஷெங்ஜோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் குடிநீர் வினியோகம் தகவல்தொடர்பு உள்ளிட்டவையும் முடங்கியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஹெனான் மாகாணத்தில் உள்ள பல்வேறு அணைகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளன. இதனால் அங்கு நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உள்ளது. இதனிடையே ஹெனான் மாகாணத்தின் யிச்சுவான் நகரில் உள்ள மிகப் பெரிய அணையில் 20 மீ நீளத்துக்கு மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அணை எந்த நேரத்திலும் உடையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த அணையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக அதிபர் ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஷெங்ஜோ நகரில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story