பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக்கிற்கு தடை விதிப்பு


பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக்கிற்கு தடை விதிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 12:26 AM GMT (Updated: 22 July 2021 12:26 AM GMT)

கோர்ட்டு உத்தரவின்படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.

இஸ்லமாபாத்,

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்'  செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு.  அந்த வகையில், பாகிஸ்தானில் டிக் டாக் செயலி அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறது. 

டிக் டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி (ஓரின சேர்க்கையாளர்கள்) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி அந்த நாட்டை சேர்ந்த பழமைவாதிகள் தொடர்ந்து அந்த செயலிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த சூழலில் கடந்த மாதம் டிக் டாக் செயலிக்கு எதிராக தனிநபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சிந்து மாகாண ஐகோர்ட்டு அந்த செயலியை தடை செய்ய பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து சிந்து மாகாண ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிக் டாக் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.

Next Story