இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை - அமெரிக்க தூதரகம் வெளியிட்டது


இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை - அமெரிக்க தூதரகம் வெளியிட்டது
x
தினத்தந்தி 22 July 2021 1:58 AM GMT (Updated: 22 July 2021 1:58 AM GMT)

விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வாஷிங்டன்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று (வியாழக்கிழமை) முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. இதையொட்டி இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கர்களுக்கு அந்த நாடு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டெல்லியிலும், அதை சுற்றிலும் ஜூலை 21 மற்றும் 22-ந் தேதிகளில் விவசாயிகளின் போராட்டம், போட்டி போராட்டங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக தகவல்களை தூதரகம் அறிந்துள்ளது. விவசாயிகளின் முந்தைய போராட்டங்களில் சில நேரம் வன்முறை வெடித்துள்ளது’ என கூறியுள்ளது.

இந்த போராட்டத்தையொட்டி டெல்லியிலும், அதை சுற்றிலும் அதிக போலீசார் குவிப்பு, கூடுதல் சோதனைச்சாவடிகள், எண்ணற்ற போராட்டக்காரர்கள் என பதற்றமான சூழல் காணப்படும் என கூறியுள்ள தூதரகம், எனவே நாடாளுமன்றம், கூட்டம் சேரும் பகுதிகள், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், அங்குள்ள சூழல்கள் குறித்து உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story