முதல் முறையாக மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்


Image courtesy : Reuters
x
Image courtesy : Reuters
தினத்தந்தி 22 July 2021 4:19 AM GMT (Updated: 22 July 2021 4:19 AM GMT)

மெக்காவில் முதல் முறையாக பாதுகாப்புப் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரியாத்,

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அங்கு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பழமைவாதம் மற்றும் அடைப்படைவாத கொள்கைகளை மாற்றி, நவீன சமுதாய கட்டமைப்புகளை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியது, பெண்கள் தங்கள் பாதுகாவலர்களின் அனுமதியின்றி தனியாக பயணம் செய்ய அனுமதி, குடும்ப விவகாரங்களில் அதிக உரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல், மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித தளங்களுக்கான பாதுகாப்புப் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது மெக்காவில், உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடத்தில், காக்கி உடையணிந்த பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், சவுதி அரேபிய இளவரசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மெக்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story