நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பெண்கள் விடுவிப்பு


நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பெண்கள் விடுவிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 4:36 AM GMT (Updated: 22 July 2021 4:36 AM GMT)

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100 பெண்கள் மற்றும் சிறுவர்களை பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக ஜம்பாரா மாகாண அரசு தற்போது தெரிவித்துள்ளது.

அபுஜா, 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாதிகள் பொது மக்களை கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்து கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.இதையடுத்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை பத்திரமாக மீட்க ஜம்பாரா மாகாண அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட ஒரு மாதத்துக்கு‌ பிறகு 100 பெண்கள் மற்றும் சிறுவர்களை பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக ஜம்பாரா மாகாண அரசு தற்போது தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பயங்கரவாதிகளுக்கு பிணை தொகை எதுவும் வழங்கப்படவில்லை என மாகாண அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே சமயம் எந்த நிபந்தனையின் அடிப்படையில் பயங்கரவாதிகள் அவர்களை விடுவித்தனர் என்பதை கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும், இந்த பரிசோதனை முடிந்த பின்பு அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story