ஆப்கானில் வான் வழி தாக்குதலில் 5 தலிபான்கள் பலி


ஆப்கானில் வான் வழி தாக்குதலில் 5 தலிபான்கள் பலி
x
தினத்தந்தி 22 July 2021 4:45 PM GMT (Updated: 22 July 2021 4:45 PM GMT)

ஆப்கானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து விடுகிறது. தலீபான்களுக்கு எதிரான இந்த போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்தது. ஆனால் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றன. 

கிட்டத்தட்ட 95 சதவீத படைகள் வெளியேறி விட்ட நிலையில் எஞ்சிய வீரர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.‌

கடந்த சில வாரங்களாக அவர்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் எண்ணற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில்  ஆப்கனின் வர்தக் மாகாணத்தில் உள்ள சயாத் அபாத் பகுதியில் தலிபான்கள் ஒன்றுகூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிகளில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,

மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்பு மோதலால் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story