கொரோனாவின் தோற்றம் குறித்து மீண்டும் ஆய்வு; உலக சுகாதார அமைப்பின் திட்டத்தால் சீனா அதிர்ச்சி


கொரோனாவின் தோற்றம் குறித்து மீண்டும் ஆய்வு; உலக சுகாதார அமைப்பின் திட்டத்தால் சீனா அதிர்ச்சி
x
தினத்தந்தி 22 July 2021 9:43 PM GMT (Updated: 22 July 2021 9:43 PM GMT)

கொரோனாவின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கும் தகவலால் சீனா அதிர்ச்சியடைந்து உள்ளது.

டிரம்ப் குற்றச்சாட்டு
உலகுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றியது. அங்குள்ள சந்தை ஒன்றில் முதன் முதலில் இந்த தொற்று காணப்பட்டதாக சீனா அறிவித்தது.ஆனால் உகானில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், இதன் பின்னணியில் மிகப்பெரும் சதி அடங்கியிருப்பதாகவும் பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின. குறிப்பாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த விவகாரத்தில் சீனாவை கடுமையாக குற்றம் சாட்டினார்.

சர்வதேச குழு ஆய்வு
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பல நாடுகள் உலக சுகாதார அமைப்புக்கு அழுத்தம் கொடுத்தன. இதைத்தொடர்ந்து சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அனுப்பி வைத்தது.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா, சீனா, டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய இந்த குழுவினர் கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை உகானில் ஆய்வு நடத்தினர். சுமார் ஒரு மாதமாக நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை கடந்த மார்ச் இறுதியில் உலக சுகாதார அமைப்புக்கு இந்த 
குழு சமர்ப்பித்தது.

மேலும் ஆய்வுகள் தேவை
அந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பு தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், ‘இது ஒரு முக்கியமான தொடக்கம் மட்டுமே, முடிவு அல்ல. உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை வைரசின் தோற்றம் தொடர்பான அனைத்து கருதுகோள்களும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் அதன் உண்மையான தோற்றம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று தெரிவித்தார்.எனவே இது தொடர்பாக அடுத்தடுத்த ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் டெட்ரோஸ் கூறியிருந்தார். அதேநேரம் உகான் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் 
வெளிப்பட்டதற்கான வாய்ப்புகளை அவர் நிராகரிக்கவும் இல்லை. அது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அறிவியலுக்கு எதிரான புரளி
இந்தநிலையில் கொரோனாவின் தோற்றம் குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்கு உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை அனைத்து பரிசோதனைக்கூடங்கள் மற்றும் சந்தைகளில் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவு சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆய்வகத்தில் 
இருந்து தோன்றியதாக கூறப்படும் கருத்து குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டிருப்பதை சீனா கடுமையாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சீன தேசிய சுகாதார திட்டத்தின் துணை மந்திரியான ஜெங் யிக்சின் நேற்று கூறுகையில், ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்ற கோட்பாடு பொது அறிவுக்கு எதிரானது என்று தெரிவித்தார். மேலும் இது அறிவியலுக்கு எதிரான புரளி என்றும் அவர் கூறினார்.


Next Story