அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையால் மழைப்பொழிவு அதிகரிப்பு; தேசிய வானிலை மைய அதிகாரிகள் தகவல்


அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையால் மழைப்பொழிவு அதிகரிப்பு; தேசிய வானிலை மைய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 23 July 2021 1:35 AM GMT (Updated: 23 July 2021 1:35 AM GMT)

அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையானது மழைப்பொழிவை அமீரகத்தில் அதிகரித்து வருகிறது.

இது குறித்து தேசிய வானிலை மையத்தின் வானிலை ஆய்வு நிபுணர் டாக்டர் அகமது ஹபீப் கூறியதாவது:-

கிளவுட் சீடிங் முறை
அமீரகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு முன் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பல்வேறு இடங்களில் இடியுடன், மழை பெய்வதை பார்த்தோம். கோடை காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பருவமழை காரணமாக அமீரகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது.இந்த நேரத்தில் வெப்பநிலை உயர தொடங்கியது. குறிப்பாக அமீரகத்தின் கிழக்கு பகுதிகளில் மழை பெய்யும் மேகங்கள் உருவாகியது. நடப்பு ஜூலை மாதத்தில் அமீரகத்தில் இந்த மேகங்கள் குளிர்ந்து கனமழையாக பெய்தது. தொடர்ந்து செய்து வரப்படும் கிளவுட் சீடிங் முறையானது மழைப்பொழிவை அமீரகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது தாழ்வான நிலையில் குமுலஸ் மேகங்கள் காணப்பட்டால் அதில் கிளவுட் சீடிங் முறையில் ரசாயனம் தூவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமீரகத்தில் செய்யப்படும் கிளவுட் சீடிங் முறை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவின் இயக்குனர் ஒமர் அல் யஜீத் கூறியதாவது:-

குமுலஸ் மேகங்கள்
கிளவுட் சீடிங் எனப்படுவது விமானம் மூலமாக ரசாயன உப்புகள் வானில் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள குமுலஸ் எனப்படும் தாழ்வாக இருக்கும் மேகங்களில் தூவி விட வைப்பதாகும். பொதுவாக சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, டிரை ஐஸ் (திட கார்பன் டை ஆக்சைடு) ஆகியவை ஒன்றாக கலந்து மேகத்தில் தூவப்படுகிறது.இதில் தாழ்வான நடுத்தர உயரத்தில் உள்ள குமுலஸ் மேகங்கள் பயன்படுத்தப்படுகிறது. அமீரகத்தில் தற்போது பாதிப்புகளை ஏற்படுத்தாத பொட்டாசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு உப்புகள் ரசாயனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
மேகத்தில் விதைப்பு செய்யும் கிளவுட் சீடிங் முறையில் பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்படுகிறது. அல் அய்ன் பகுதியில் இருந்து இந்த விமானங்கள் புறப்படுகின்றன.

கூடுதல் மழைப்பொழிவு
இந்த ரசாயனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுசிறு குழாய்கள் போல் உள்ள அமைப்பில் வைக்கப்படுகிறது. இந்த குழாய் அமைப்புகள் சிறப்பு கருவிகளுடன் விமானத்தின் இருபுறமும் உள்ள இறக்கை பகுதியில் பொருத்தப்படுகிறது. பிறகு உயரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அந்த குழாய்களில் தீப்பற்ற வைக்கப்பட்டு எரிய வைப்பதின் மூலம் அதில் இருந்து வெளிவரும் ரசாயன புகையானது மேகத்தில் கலக்கப்படுகிறது. இதைத்தான் கிளவுட் சீடிங் என அழைக்கிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக மொத்தம் 247 முறை வானில் கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கிளவுட் சீடிங் செய்ய ஏற்ற காலமாக உள்ளது. இந்த 3 மாத காலங்களுக்கு பிறகு நல்ல மழைப்பொழிவு ஏற்படும். வழக்கமாக பெறப்படும் மழைப்பொழிவில் இருந்து 30 முதல் 35 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவை பெற முடியும். இந்த 
அளவை பெறும் அளவிற்கு வேறு எந்த தொழில்நுட்பமும் இன்னும் உருவாக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story