அல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதி, யுனெஸ்கோ நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்று 10 ஆண்டு நிறைவு


அல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதி, யுனெஸ்கோ நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்று 10 ஆண்டு நிறைவு
x
தினத்தந்தி 23 July 2021 1:41 AM GMT (Updated: 23 July 2021 1:41 AM GMT)

அபுதாபி கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் தொல்பொருள் ஆய்வு பிரிவின் தலைவர் அப்துல்லா அல் காபி கூறியதாவது:- அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையின் 10-வது கிலோமீட்டரில் ஹிலி என்ற பாலைவன பகுதி உள்ளது.

அமீரக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 1970-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வு குழுவினர்கள் ஹிலி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.அந்த இடத்தில் செய்த ஆய்வில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைய வைக்கும் அளவில் தொன்மையான மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த ஆராய்ச்சியில் ஹிலி என்ற பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கடந்த 
2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதியானது கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக தொல்பொருள் பூங்கா என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. இந்த இடத்தின் தொன்மையை கருத்தில் கொண்டு ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. மேலும் அதன் பாரம்பரிய பகுதிகளின் பட்டியலிலும் இந்த பகுதி சேர்க்கப்பட்டது. இங்குள்ள கட்டிடங்கள், பாறைகள் மற்றும் அந்த பகுதியில் கிடைத்த தடயங்களை ஆய்வு செய்ததில் அந்த இடமானது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இந்த பகுதி இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story