பூமியை நெருங்கி வரும் சிறுகோள்: விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பு


பூமியை நெருங்கி வரும் சிறுகோள்: விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 July 2021 4:29 PM GMT (Updated: 24 July 2021 4:29 PM GMT)

4 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு சிறுகோள் ஒன்று, நாளை இரவு 11.21 மணிக்கு பூமி அருகே கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வாஷிங்டன்,

விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம்.

அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். எனவே பூமிக்குள் வருவதற்குள் அது எரிந்து சாம்பலாகி விடுவது உண்டு. அதையும் மீறி முழுமையாக எரியாமல் பூமியில் விழும் கற்களும் உண்டு.

இரவு நேரத்தில் வானத்தில் திடீரென எதோ ஒரு பொருள் தீபிடித்து எரிந்து கொண்டு பாய்ந்து செல்வதை பார்க்கலாம். விண்கற்கள் எரிவதுதான் இப்படி நமக்கு தென்படும்.

பூமிக்கு அருகே நகர்ந்து செல்லக்கூடிய, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அதில் ஆயிரத்து 45 சிறுகோள்கள் ஆபத்தானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் 4 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு சிறுகோள் ஒன்று, நாளை இரவு 11.21 மணிக்கு பூமி அருகே கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.  '2008 G20' என்ற சிறுகோள் நாளை இரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது.

ஆனால் அது பூமி மீது மோதிவிடுமோ என நாம் கவலைப்பட அவசியமில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். 97 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளம் கொண்ட அந்த குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது.
இதே சிறுகோள், 1935ஆம் ஆண்டு 19 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும், 1977ஆம் ஆண்டு 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும் கடந்து சென்றதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story