செல்போன் உளவு விவகாரம்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உளவுபார்ப்பது கவலை அளிக்கிறது: அமெரிக்கா


செல்போன் உளவு விவகாரம்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உளவுபார்ப்பது கவலை அளிக்கிறது: அமெரிக்கா
x
தினத்தந்தி 25 July 2021 12:32 AM GMT (Updated: 25 July 2021 12:32 AM GMT)

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, இப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிவில் சமூகத்தை உளவுபார்ப்பது எப்போதும் கவலை அளிக்கிறது என தெரிவித்தது.

உளவு விவகாரம்
இந்தியாவில் இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளைப் பயன்படுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பிரபல தேர்தல் யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர், மத்திய மந்திரிகள், ஒரு நீதிபதி உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளன என கடந்த 18-ந் தேதி சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தவிரவும், நாடாளுமன்றத்தையும் முடக்கி உள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

அமெரிக்கா பரபரப்பு கருத்து
ஆனாலும்கூட இது அமெரிக்காவிலும் எதிரொலித்தது.வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த தெற்காசியா, மத்திய ஆசியா விவகாரங்களுக்கான துணை மந்திரி டீன் தாம்சனிடம் இந்திய நிருபர்கள் இதுதொடர்பாக கேள்விகளை தொடுத்தனர். 

அவற்றுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
சிவில் சமூகம், ஆட்சி மீதான விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் அல்லது எவருக்கும் எதிராக இதுபோன்ற உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்போதும் கவலை அளிக்கக்கூடியதாகும்.அதே நேரத்தில் இந்திய விவகாரத்தைப் பொறுத்தமட்டில், என்னிடம் குறிப்பிட்ட எந்த சிறப்பு உள்பார்வைகளும் இல்லை.இது ஒரு பரந்த பிரச்சினை ஆகும். ஆனால், நிறுவனங்களின் உளவு தொழில்நுட்பம் இந்த வகை வழிகளில் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். இதில் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story