உலக செய்திகள்

அதிகரிக்கும் தலீபான்களின் ஆதிக்கம்: நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது ஆப்கானிஸ்தான் + "||" + Afghanistan imposes near-nationwide curfew to curb sweeping Taliban offensive

அதிகரிக்கும் தலீபான்களின் ஆதிக்கம்: நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது ஆப்கானிஸ்தான்

அதிகரிக்கும் தலீபான்களின் ஆதிக்கம்: நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்த நாட்டு அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்
உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியிலிருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது.‌ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது.‌ இந்தப் போரில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக களம் 
இறங்கின. இந்த படைகள் தலீபான்களுக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்தன.

அமெரிக்க படைகள் வெளியேற்றம்
இந்த சூழலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க அரசு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறி வருகின்றன. கிட்டத்தட்ட 95 சதவீத படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், எஞ்சிய படை வீரர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலவீனம் ஆக்கியுள்ளது. இதனால் அங்கு தலீபான்களின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்
ஏற்கனவே நாட்டின் சரிபாதி பகுதியை தங்களின் கட்டுக்குள் வைத்துள்ள பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.இந்த நிலையில் தலீபான்கள் நகரங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கும் முயற்சியாக ஆப்கானிஸ்தான் அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தலீபான்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

3 மாகாணங்களுக்கு விலக்கு
ஆப்கானிஸ்தானில் மொத்தம் 34 மாகாணங்கள் உள்ளன. இதில் 3 மாகாணங்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வன்முறையை கட்டுப்படுத்தவும், தலீபான் படையினரின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் நாட்டின் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதில் காபூல், பஞ்ச்ஷீர் மற்றும் நங்கர்ஹார் ஆகிய 3 மாகாணங்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.