சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்; விமானம், ரெயில் சேவை ரத்து


சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்; விமானம், ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 25 July 2021 9:20 PM GMT (Updated: 25 July 2021 9:20 PM GMT)

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் மத்திய மாகாணம் ஹெனானில் உள்ள ஷெங்ஜோ நகரில் 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த நகரமே மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்துக்கு 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். சீனா இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் நேற்று அந்த நாட்டின் ஷெஜியாங் மாகாணத்தை இன்-பா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மின்கம்பங்கள் சரிந்தன. வீடு மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பலமைல் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து அங்கு கன மழை கொட்டி தீர்த்தது.

எனினும் புயல் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அதேசமயம் புயல் காரணமாக ஷெஜியாங் மாகாணத்தின் ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story