கொரோனா தடுப்பூசி கட்டாயம்: பிரான்சில் மக்கள் போராட்டம்


கொரோனா தடுப்பூசி கட்டாயம்: பிரான்சில் மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 1:27 PM GMT (Updated: 26 July 2021 1:27 PM GMT)

அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று பிரான்சில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரீஸ்,

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும், பொதுமக்களில் பலர் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், பொதுமக்கள் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ளும் பொருட்டு புதிய விதிகளை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு  வழங்கப்படுகிறது.

இந்த சுகாதார அனுமதிச் சீட்டு இல்லாத பட்சத்தில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். அதாவது, உணவகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் நீண்ட தூர ரயில் பயணங்கள், விமான பயணங்கள் மேற்கொள்வதற்கும் இந்த சுகாதார அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மசோதா, பிரான்ஸ் பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. செனட் சபையில் மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். 'எங்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுகிறது; மசோதாவை திரும்பப் பெற வேண்டும்' என அவர்கள் கோஷமிட்டனர்.

Next Story