உலக செய்திகள்

துனிசியா பிரதமர் பதவி நீக்கம்; நாடாளுமன்றம் கலைப்பு + "||" + Tunisia on edge as president suspends parliament, fires PM

துனிசியா பிரதமர் பதவி நீக்கம்; நாடாளுமன்றம் கலைப்பு

துனிசியா பிரதமர் பதவி நீக்கம்; நாடாளுமன்றம் கலைப்பு
கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டில் துனிசியா நாட்டின் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
துனிசியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்
வடஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கொடிய வைரசால் அங்கு 18 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் நாட்டில் நிலவும் இந்த நெருக்கடி நிலைக்கு பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி தான் காரணம் என்றும் அவர் கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை 
என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம்
இந்த சூழலில் பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி மற்றும் அவரது மிதவாத முஸ்லிம் கட்சியான என்னாதா கட்சிக்கு எதிராக நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைநகர் துனிஸ் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் பெரும் வன்முறை வெடித்தது. பல்வேறு நகரங்களில் உள்ள என்னாதா கட்சி அலுவலகங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.‌ டூஜூர் என்கிற நகரில் உள்ள கட்சியின் உள்ளூர் தலைமையகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.இது தவிர மேலும் பல இடங்களில் அரசு சொத்துக்கள் மற்றும் வாகனங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் நாடு முழுவதும் கடும் அசாதாரண சூழல் உருவானது.

பிரதமர் பதவி நீக்கம்; நாடாளுமன்றம் கலைப்பு
இதையடுத்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் கைஸ் சையத், பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் ஆட்சிப்பொறுப்பை தான் ஏற்பதாகவும் அவர் அறிவித்தார்.இதுபற்றி அவர் பேசுகையில் ‘‘நாங்கள் இந்த முடிவுகளை எடுத்து உள்ளோம். துனிசியாவில் சமூக அமைதி திரும்பும் வரை நாங்கள் அரசை காப்பாற்றுவோம்’’ என்றார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டில் மேலும் வன்முறை அதிகரித்தால் அதற்கு ராணுவ சக்தியுடன் பதில் அளிக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

ஆட்சி கவிழ்ப்பு சதி என குற்றச்சாட்டு
துனிசியாவை பொறுத்தவரையில் அதிபர் மற்றும் பிரதமர் மக்களின் வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த நாட்டின் அரசியலமைப்பின்படி அதிபர் ராணுவம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை மட்டுமே மேற்பார்வையிடுவார்.ஆனால் 2019-ல் அதிபராக தேர்வு செய்யப்பட்ட கைஸ் சையத், பதவிக்கு வந்த நாள் முதல் பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியுடன் முரண்பட்டு வந்தார்.இருவருக்கும் இடையில் அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை அதிபர் கைஸ் சையத் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் அதிபர் கைஸ் சையத்தின் இந்த நடவடிக்கையை ஆட்சிக் கவிழ்ப்பு சதி என குற்றம் சாட்டியுள்ளன.