ஈரானில் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை, துப்பாக்கி சூடு; ஐ.நா. கண்டனம்


ஈரானில் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை, துப்பாக்கி சூடு; ஐ.நா. கண்டனம்
x
தினத்தந்தி 26 July 2021 9:51 PM GMT (Updated: 26 July 2021 9:51 PM GMT)

ஈரானின் 31 மாகாணங்களில் அதிக வெப்பமான மாகாணம் குஜெஸ்தான். இந்த மாகாணத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அங்கு தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து கடந்த சில வாரங்களாக அங்கு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.பகலில் வெயில் வாட்டி வதைப்பதால் இரவு நேரத்தில் மக்கள் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்த போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.இதனால் போராட்டத்தில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது.இந்த நிலையில் குஜெஸ்தானில் நேற்று முன்தினம் இரவு நடந்த போராட்டத்தின்போது பல்வேறு நகரங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் 
வெடித்தது.

இதையடுத்து போராட்டத்தை கலைக்க போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் இந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதேவேளையில் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 8 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமைதி வழியில் போராடும் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக கூறி ஈரானுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story