இந்தியாவுக்கான பயண தடையை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்


இந்தியாவுக்கான பயண தடையை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்
x
தினத்தந்தி 30 July 2021 8:58 PM GMT (Updated: 30 July 2021 8:58 PM GMT)

இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயண தடையை ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிலா,

இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருந்ததால் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. தங்களது நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்த நாடுகள் அறிவித்தன.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. இந்தியா தவிர பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அப்போது தடை விதித்தது.‌ பின்னர் இந்த தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயண தடையை ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் குறித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே கவலை தெரிவித்ததை தொடர்ந்து இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story