அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல்; இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மகிழ்ச்சி


அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல்; இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 July 2021 1:28 AM GMT (Updated: 31 July 2021 1:28 AM GMT)

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. ஆண்டுக்கு, 85 ஆயிரம் ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘எச்-1 பி’ விசா குலுக்கல் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்தது. இந்தநிலையில் அரிதிலும் அரிதாக ‘எச்-1 பி’ விசா விண்ணப்பதாரர்களுக்கான குலுக்கலை 2-வது முறையாக நடத்த அமெரிக்க குடியுரிமை துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகைமை வெளியிட்ட அறிக்கையில் ‘‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ‘எச்-1 பி’ விசாக்களுக்கான கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் நாடாளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட ‘எச்-1 பி’ விசாக்களின் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை என்பதை தீர்மானித்த பிறகு 2-வது குலுக்கலை நடத்த முடிவு எடுக்கப்பட்டது’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த 2-வது குலுக்கல் முதல் குலுக்கலில் தேர்வு ஆகாத பல விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.‌ இவர்களில் நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் அடங்குவர்.‌ இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story