மலேசியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 17,786 பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Aug 2021 12:49 AM GMT (Updated: 1 Aug 2021 12:51 AM GMT)

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது. மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தபோதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,13,272 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக 165 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,024 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 11,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 9,14,639 குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,89,609 பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மோசமான முறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story