உலகின் 14 அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக துபாய் எதிர்கால அருங்காட்சியகம் தேர்வு


உலகின் 14 அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக துபாய் எதிர்கால அருங்காட்சியகம் தேர்வு
x
தினத்தந்தி 1 Aug 2021 1:49 AM GMT (Updated: 1 Aug 2021 1:49 AM GMT)

உலகின் 14 அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக துபாய் எதிர்கால அருங்காட்சியகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

துபாய் எதிர்கால அருங்காட்சியகம் தேர்வு
நேசனல் ஜாக்கிரபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம் இயற்கை வளம், அறிவியல், சாகசங்கள், வனப்பகுதியில் இருக்கும் உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களை புத்தகம் மூலமாகவும், தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் லாப நோக்கமற்ற வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிறுவனம் உலகின் 14 அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக துபாய் எதிர்கால அருங்காட்சியகத்தை தேர்வு செய்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அதன் கட்டிடக்கலை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கொண்டுள்ளதால் உலகின் அழகான அருங்காட்சியகமாக இடம் பெற்றுள்ளது.

உலகளாவிய அடையாளம்
இந்த அருங்காட்சியகம் துபாய் நகரின் ஷேக் ஜாயித் சாலையில் அமைந்துள்ளது. துபாய் நகரின் இதய பகுதியில் அமைந்துள்ள சாலையில் இந்த அருங்காட்சியகம் கட்டிடக்கலையின் அதிசயமாக திகழ்ந்து வருகிறது.இந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் உலகளாவிய ஒரு அடையாளமாக இந்த அருங்காட்சியகம் மாறும். இது குறித்து அமீரக அமைச்சரவை விவகாரத்துறை மந்திரியும், துபாய் எதிர்கால அறக்கட்டளையின் நிர்வாகக் குழு துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான முகம்மது அல் கெர்காவி கூறியதாவது:-

உலகின் நுழைவாயில்
துபாய் எதிர்கால அருங்காட்சியகம் அதன் கட்டுமான பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னரே உலகின் அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருங்காட்சியகத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்டவற்றில் முன்னிலை வகிப்பதை தெரிந்து கொள்ளலாம்.இந்த அருங்காட்சியகம் அதன் வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் அமீரகம் மற்றும் உலகின் நுழைவாயிலாக திகழும் வகையில் உள்ளது. பொறியியல் துறையில் துபாய் நகரம் முன்னிலை 
வகிக்கும் வகையிலும், உலகெங்கும் உள்ள திறமையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோரை ஈர்க்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திகழும். இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவதன் மூலம் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளை வழங்கும்.

சர்வதேச விருது
இந்த அருங்காட்சியகம் 33 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் 7 அடுக்குகளை கொண்டு, 77 மீட்டர் உயரமுடையதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 14 ஆயிரம் மீட்டர் அளவுக்கு அரபி மொழி வடிவெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 2 பாலங்களில் ஒன்று ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலையும், மற்றொன்று எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையிலும் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள 1,024 தகடுகள் ரோபோக்களால் தயாரிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் ரோபோக்களால் தயாரிக்கப்பட்ட தகடுகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்ற பெருமையை இது பெறுகிறது. இந்த அமைப்பின் கட்டிடக்கலைக்காக சர்வதேச விருதும் கிடைத்துள்ளது.

Next Story