அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்; காரணம் என்ன?


அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்; காரணம் என்ன?
x
தினத்தந்தி 2 Aug 2021 3:07 AM GMT (Updated: 2 Aug 2021 3:07 AM GMT)

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில், அமெரிக்காவில் பெருந்தொற்றுக்கு மத்தியில் வாடகை செலுத்த முடியாது தவித்த அமெரிக்கர்களை அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பல பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனிடையே, மக்களை அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த தடை உத்தரவை அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே‌ இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜனநாயக கட்சி உறுப்பினர் கோரி புஷ் நாடாளுமன்றத்துக்கு வெளியே விடிய விடிய போராட்டம் நடத்தினார்.

Next Story