வன்முறையை கைவிட்டால் தாலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்


வன்முறையை கைவிட்டால் தாலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2021 11:30 PM GMT (Updated: 12 Aug 2021 11:30 PM GMT)

வன்முறையை நிறுத்தினால், தலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார்.  அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். சமீப நாட்களில் அவர்கள் கைப்பற்றி உள்ள 6 முக்கிய நகரங்களில் இருக்கும் சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்து உள்ளனர்.  

அவர்களில் பலர் போதை பொருள் கும்பலை சேர்ந்தோர், கடத்தல்காரர்கள் மற்றும் ஆயுத கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.  ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள 630 கைதிகள், நிம்ரோஜ் மாகாணத்தில் உள்ள 350 கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தலிபான்கள் விடுவித்து உள்ளனர். 

இந்த நிலையில் தலிபான் அமைப்பினர் வன்முறையை நிறுத்தினால், அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளதாகவும், மத்தியஸ்தராக செயல்படும் கத்தாரிடம் ஆப்கானிஸ்தான் அரசு இதனை தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story