அமெரிக்காவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


அமெரிக்காவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 10:29 PM GMT (Updated: 14 Aug 2021 10:29 PM GMT)

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு டெல்டா வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 1 லட்சத்து 29 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது.

அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் தினந்தோறும் சராசரியாக 600 உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. இது கடந்த ஜூன் மாதம் பதிவானதை விட 2 மடங்கு அதிக எண்ணிக்கை ஆகும். 

இந்த சூழலில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 1,902 குழந்தைகள் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 2.4 சதவீதம் பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக குழந்தைகள், மிக எளிதாக உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, டெல்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story