போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது - ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி


போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது - ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி
x
தினத்தந்தி 15 Aug 2021 1:02 AM GMT (Updated: 2021-08-15T06:32:03+05:30)

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை மீண்டும் அணிதிரட்டுவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

காபுல்,

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. 

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். ஆப்கன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றுவருகிறார்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதை இந்தியா உள்பட 12 நாடுகள் அங்கீகரிக்க மறுத்துள்ளன. உடனடியாக தலிபான்கள் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நேற்று அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது;-

“ஆப்கானிஸ்தான்  மிகவும் அபாயகரமானதாகவும், ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், நமது ராணுவத்தையும், பாதுகாப்புப் படையினரையும் ஒருங்கிணைப்பதே முக்கிய நோக்கம். அதனை நோக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாங்கள் ஒருபோதும் போரை அனுமதிக்கப் போவதில்லை. எனவே, ஆப்கானிஸ்தான் மக்கள் அமைதியும், ஸ்திரத்தன்மையும் கருதும் ஒரு நியாயமான அரசியல் தீர்வை விரும்பும் நமது சர்வதேச நட்பு நாடுகள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசின் மூத்த பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

ஆப்கானிஸ்தான் மீது தற்போது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ள போரில் இனியும் உயிா்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது. எனவே போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் இந்தச் சூழலில், ஆப்கன் பாதுகாப்பு படையினரை மீண்டும் அணிதிரட்டுவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதுதொடா்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என தெரிவித்தார்.

Next Story