ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்


ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
x
தினத்தந்தி 17 Aug 2021 1:27 AM GMT (Updated: 17 Aug 2021 1:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின்னர் வேகமாக முன்னேறி வந்த தலீபான்கள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றியதன் மூலம் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.

அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில், தலீபான்கள் தலைமையில் புதிய அரசு அமைகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்க படைகளை திரும்ப பெறும் ஜனாதிபதி ஜோ பைடனின் தவறான முடிவே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்று ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஆப்கானிஸ்தானில் இப்படி நடக்க அனுமதித்ததற்கு ஜோ பைடன் அவமானத்துடன் ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் இது. தலீபான்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானிஸ்தானை அவர்களிடம் சரிய விட்டது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக இருக்கும். நான் ஜனாதிபதியாக இருந்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது மிகவும் வித்தியாசமானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருந்திருக்கும்’’ என தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சியில்தான் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக தலீபான்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் தோல்விக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் ஜோ பைடன் தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறி வெள்ளை மாளிகை முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story