ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 18 பேர் பலி


ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 18 பேர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2021 4:50 AM GMT (Updated: 19 Aug 2021 4:50 AM GMT)

ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது.

இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது. ஆனால் துருக்கி அரசு குர்து போராளிகளின் இந்த பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது.‌ குறிப்பாக ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தரை வழியாகவும் வான் வழியாகவும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிஞ்சர் நகரில் குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. அப்போது குர்து இன போராளிகளால் ஆஸ்பத்திரியாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் குர்து இன போராளிகள் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.‌

Next Story