துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் இடமாக விளங்கும்: ஐ.நாவுக்கான அமீரக தூதர்


துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் இடமாக விளங்கும்: ஐ.நாவுக்கான அமீரக தூதர்
x
தினத்தந்தி 20 Aug 2021 5:06 AM GMT (Updated: 20 Aug 2021 5:06 AM GMT)

துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 கண்காட்சியானது உலகளாவிய அளவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் இடமாக விளங்கும் என ஐ.நாவுக்கான அமீரக தூதர் லானா நுசைபா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பெண்களுக்கான பிரத்யேக அரங்கு
கொரோனா தொற்று பரவல் காலக்கட்டத்திற்கு பிறகு நடைபெறும் மாபெரும் நிகழ்வாக எக்ஸ்போ 2020 கண்காட்சி உள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாகும். பெரிய கனவுகள் மற்றும் கட்டுக்கடங்காத நோக்கங்களை கொண்ட மனப்பான்மையுடன் விளங்கும் நாடு என்பதை இந்த கண்காட்சி நிரூபிப்பதாக இருக்கும்.இந்த எக்ஸ்போ 2020 கண்காட்சியானது உலக அரங்கில் பெண்களின் அதிகாரம் குறித்த விவரத்தை கொண்டு வரும் தனித்துவமான வாய்ப்பாகும்.குறிப்பாக எக்ஸ்போ கண்காட்சி வரலாற்றில் துபாயில் நடைபெறும் 2020 கண்காட்சியில்தான் பெண்களுக்கான பிரத்யேக அரங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இதற்கு சான்றாகும்.இதில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

பாலின சமநிலைக்கு ஒத்துழைக்க முடிவு
உலக அளவில் பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பவர்கள் அதேநேரத்தில் அவர்களது குரலை உரக்க ஒலிக்க உதவும் தளத்தையும் இங்கு வழங்குவார்கள். அமீரகம் எப்போதும் பெண்களும், ஆண்களும் சமம் என்பதை நம்பும் நாடாகும். அதன் காரணமாகவே சட்டத்தின்படி பெண்களின் சம உரிமைகளுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.பணியிடங்களில் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கிறோம். மேலும் பெண்களின் உயர் கல்வி மற்றும் அவர்கள் பணியாற்றும் இடங்களில் ஒத்துழைப்பு அளித்து சூழ்நிலையை அவர்களுக்கு எளிதாக்குகிறோம். இதனை பிரதிபலிக்கும் முயற்சியாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது உலகளாவிய அளவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் இடமாக செயல்படுவதை காணமுடியும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமீரகம் தனது உறுப்பினர்களை நியமனம் செய்து பயன்படுத்துகிறது. இதில் ஐ.நாவின் பணிகளில் பாலின சமநிலைக்கு ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story