பாகிஸ்தான்: சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் - 2 குழந்தைகள் பலி


பாகிஸ்தான்: சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் - 2 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 20 Aug 2021 10:05 PM GMT (Updated: 21 Aug 2021 1:09 AM GMT)

பாகிஸ்தானில் சீன நாட்டவரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பாகிஸ்தான் அரசுப்படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்நாட்டு அரசுப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

மேலும், பலூசிஸ்தான் வழியாக நடைபெற்று வரும் பாகிஸ்தான் - சீனா பொருளாதார பாதையை நடவடிக்கைகளுக்கு எதிராக சீன நாட்டினரை குறிவைத்தும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தின் கவர்டர் நகரில் நேற்று இரவு 7 மணியளவில் சீன தொழிலாளர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகள் உடன் சென்றனர்.

சீன தொழிலாளர்கள் சென்ற வாகனம் கிழக்கு வழி சாலையில் சென்றபோது அந்த வாகனத்தை இடைமறிந்த கிளர்ச்சியாளர் தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். அப்போது, சாலையின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கிக்கொண்டனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் விளையாடிக்கொண்டிருந்த அந்த 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சீன தொழிலாளர்களும், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலூசிஸ்தானில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பான பலூஜ் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 9 சீனர்கள் உயிரிழந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், தற்கொலைப்படை தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Next Story