காபூல் திருமண மண்டபத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு


காபூல் திருமண மண்டபத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 4:12 AM GMT (Updated: 21 Aug 2021 4:12 AM GMT)

காபூல் திருமண மண்டபத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் 200 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். தஜிகிஸ்தானில் இருந்து விமானம் வருவதற்காக காத்திருக்கிறார்கள்.

இந்திய தூதர் வருகை
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 150 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, காபூல் நகரில் உள்ள காலிஜா என்ற திருமண மண்டபத்தில் சுமார் 200 இந்தியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டபம், விமான நிலையத்தில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது. அங்கு பாதுகாப்பு படையினர் யாரும் பாதுகாப்புக்கு இல்லை.

கர்நாடக பாதிரியார் தகவல்
இந்த தகவலை கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராபர்ட் கிளைவ் என்ற பாதிரியார் தெரிவித்தார். இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தங்கி இருக்கிறார்.ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான்களுக்கும் இடையே சண்டை நடந்தபோது மலைப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தார். அடிக்கடி இடம் மாற்றி வந்தார். சண்டை முடிந்தபோது, விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவர் நாடு திரும்ப முடியவில்லை.

காபூல் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள அவர் கூறியதாவது:-
நான் பாமியான் மாகாணத்தில் இருந்து வேன் மூலம் காபூலுக்கு வந்தேன். ஆப்கனை சேர்ந்த குடும்பஸ்தர் போல் வேடமணிந்து வந்தேன். ஆனால், காபூல் விமான நிலையத்தில் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

200 பேர் காத்திருப்பு
அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர், காபூலில் உள்ள காலிஜா திருமண மண்டபத்தில் சுபைர் என்பவரை சந்திக்குமாறு கூறினார். அதன்படி நான் அங்கு சென்றபோதுதான், ஏற்கனவே 200 இந்தியர்கள் இருப்பதை பார்த்தேன். அங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அச்சத்துடன் இருக்கிறார்கள்.தஜிகிஸ்தான் நாட்டில் விமானங்கள் தயார்நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கா நேரம் ஒதுக்கிக் கொடுத்தவுடன் அந்த விமானங்கள் வந்து எங்களை அழைத்துச் செல்லும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.எனவே, அந்த விமானங்களுக்காக காத்திருக்கிறோம். வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைப்பு பணியை செய்தபோதிலும், கள நிலவரம் குழப்பமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியர்கள் உதவிக்காக சிறப்பு பிரிவு
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது.தாயகம் திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளது.

Next Story