ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-க்கு பின்னரும் ஆப்கானியர்கள் வெளியேற தலீபான்கள் சம்மதம்


ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-க்கு பின்னரும் ஆப்கானியர்கள் வெளியேற தலீபான்கள் சம்மதம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:50 AM GMT (Updated: 26 Aug 2021 3:32 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் இருந்து ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளது. இதற்கான நடைமுறையாக கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. இதனால், ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளன.

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடுமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றன.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் அலை அலையாக திரள்வதால் ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் நீடித்து வருகிறது.

எனினும் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மூலம் காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்களையும், நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களையும் கூட்டம் கூட்டமாக மீட்டு வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதோடு, காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை‌ வெளியேற்றும் பணிகளும் நிறைவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முயற்சி செய்யும் ஆப்கானிய மக்களின் நிலை என்ன ஆகும் என்பது மிகவும் குழப்பமானதாகவே உள்ளது. ஆப்கானியர்களை தலீபான்கள் வெளியேறவிடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னரும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தலீபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை ஜெர்மனி தூதர் உறுதிபடுத்தியுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் மருத்துவம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஆப்கானியர்கள் தங்கள் சொந்தநாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story