காபூல் குண்டுவெடிப்பு; அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவு


காபூல் குண்டுவெடிப்பு; அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2021 4:36 AM GMT (Updated: 27 Aug 2021 4:36 AM GMT)

காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை முன்னிட்டு வரும் 30ந்தேதி வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.



காபூல்,

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நீண்ட கால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.

இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

வருகிற 31ந்தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.  இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

இதற்கிடையில், காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.  இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 73 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.  மற்ற 60 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறியுள்ளார்.  அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம்  அளிக்கும் வகையில், வருகிற 30ந்தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.


Next Story