காபூல் விமான நிலையத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் - அமெரிக்கா தகவல்


காபூல் விமான நிலையத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் - அமெரிக்கா தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2021 2:26 AM GMT (Updated: 28 Aug 2021 2:26 AM GMT)

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. 

இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தை குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இது குறித்து, அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையையடுத்து காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story