காபூல் விமான நிலையத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் சீல்


காபூல் விமான நிலையத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் சீல்
x
தினத்தந்தி 29 Aug 2021 8:04 AM GMT (Updated: 29 Aug 2021 8:04 AM GMT)

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் சீல் வைத்து உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நீண்ட கால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.  இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

வருகிற 31ந்தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.  இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்து வருகின்றனர்.

காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 190 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.  இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார்.  அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம்  அளிக்கும் வகையில், வருகிற 30ந்தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.  இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி உள்பட முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா அறிவித்து உள்ளது. 

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு தலீபான்கள் சீல் வைத்துள்ளனர். இதனால் உள்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  ஒரு சிலர் தரை மார்க்கமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.  உடனடியாக தனது நாட்டு குடிமக்களை காபூலில் இருந்து வெளியேறும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story