அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை பந்தாடிய ‘ஐடா’ புயல்


அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை பந்தாடிய ‘ஐடா’ புயல்
x
தினத்தந்தி 30 Aug 2021 10:13 PM GMT (Updated: 30 Aug 2021 10:13 PM GMT)

பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அண்மை காலமாக அடிக்கடி சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கி வருகின்றன.

வாஷிங்டன், 

கடந்த வாரம் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘ஐடா' என்கிற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை கடுமையாக அச்சுறுத்தி வந்தது. இந்தப் புயல் லூசியானாவை தாக்கினால் 1850-ம் ஆண்டுக்கு பிறகு அந்த மாகாணத்தை தாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இது இருக்கும் என மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் எச்சரித்திருந்தார். அதேபோல் இந்த புயல் கடலோரப் பகுதிகளுக்கு அப்பாலும் பெரிய பேரழிவை உண்டாக்கக்கூடிய உயிர் அச்சுறுத்தலாக இருக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்பார்த்தபடியே ‘ஐடா' புயல் லூசியானா மாகாணத்தை பந்தாடியது. இந்த புயல் அங்கு கரையை கடந்தபோது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் சின்னாபின்னமானது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன.

புயலைத் தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூ ஆர்லியன்ஸ் நகரம் வெள்ளக்காடாகியுள்ளது. இதனிடையே ஐடா புயல் காரணமாக லூசியானா மாகாணத்தில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு சுமார் 16 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனிடையே புயலின் போது நியூ ஆர்லியன்ஸ் நகரில் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.‌ புயல், மழையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2005-ம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரில் கத்ரீனா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் சுமார் 1800 பேர் பலியாகினர். இதனிடையே ஐடா, கத்ரீனாவை விட வலுவானது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் புயல் பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.


Next Story