ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியீடு


ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 31 Aug 2021 1:28 AM GMT (Updated: 31 Aug 2021 1:28 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான நீண்டகால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.  இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டன.

இந்த சூழலில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் 190 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.  இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் சீல் வைத்து உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.  இதனை அதிபர் ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார்.  காபூலில் இருந்து, கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், காபூலில் அமெரிக்க படைகளின் நடவடிக்கை முடிந்ததன் அடையாளம் ஆக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு உள்ளார் என தெரிவித்து அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.


Next Story