ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றம்; அமெரிக்க வெளியுறவு மந்திரி


ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றம்; அமெரிக்க வெளியுறவு மந்திரி
x
தினத்தந்தி 31 Aug 2021 5:21 AM GMT (Updated: 31 Aug 2021 5:21 AM GMT)

ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.


வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான நீண்டகால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.  இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் ஆகஸ்டு 31ந்தேதியுடன் (இன்று) வாபஸ் பெறப்படும் என அதிபர் ஜோ பைடன் முன்பே அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன.  காபூலில் இருந்து, கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க படைவெளியேறிய நிலையில், அதனை கொண்டாடும் வகையில் தலீபான்கள் வானை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதுபற்றி சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சி-17 ரக விமானம் நள்ளிரவில் புறப்பட்டது.  அந்த விமானம் கிளம்பி சென்றவுடன் இந்த கொண்டாட்டங்களில் தலீபான்கள் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் வாபஸ் பெற்றது பற்றி அமெரிக்க மக்களிடம் அதிபர் பைடன் இன்று பேச இருக்கிறார்.  இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரக நடவடிக்கைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.

அதற்கு பதிலாக கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகருக்கு அமெரிக்க தூதரகம் மாற்றப்படுகிறது.  இதுபற்றி முறைப்படி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.  ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழல் மற்றும்  அரசியல் நிலைமை நிச்சயமற்ற நிலையில் எதிர்கால நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.


Next Story