ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்


ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Sep 2021 12:21 AM GMT (Updated: 1 Sep 2021 12:21 AM GMT)

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது என்று இந்தியாவின் தலைமையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நியூயார்க், 

ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து பல்வேறு நாட்டு மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதன்படி நேற்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்றார். அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என்று அந்த நாடு உறுதி அளித்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தன. அந்த தீர்மானம் "எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக்கூடாது; அந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது" என வலியுறுத்தியது.

மேலும் "ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேற தலீபான்கள் அனுமதிக்க வேண்டும்" எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் 13 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேவேளையில் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியா மற்றும் சீனா இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

முன்னதாக 15 நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தற்போது தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story