பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Sep 2021 11:57 PM GMT (Updated: 1 Sep 2021 11:57 PM GMT)

கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

பீஜிங், 

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ‌ ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.

அதோடு, உலகிலேயே அதிக அளவு கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த ஆற்றல் நுகர்வில் 20 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்தநிலையில் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி சீன வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் பருவ நிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையை இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின்போது தொழில்துறைக்கு முந்திய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த வலுவான முயற்சிகளுக்கு ஜான் கெர்ரி அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.


Next Story