சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவுகணை வீச்சு


சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவுகணை வீச்சு
x
தினத்தந்தி 5 Sep 2021 5:55 PM GMT (Updated: 5 Sep 2021 5:55 PM GMT)

சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணை நடு வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது. எனினும் இதில் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். வீடுகள் சேதமடைந்தன.

சவுதி நகரங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியும் ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.குறிப்பாக சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களான அப்ஹா மற்றும் ஜிசான் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.‌

விமான நிலையம் மீது தாக்குதல்
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான சவுதி அரேபியாவின் அரம்கோ நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் நாட்டின் 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி அப்ஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் (ஆளில்லா குட்டி விமானம்) தாக்குதல் நடத்தப்பட்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் விமானம் ஒன்றும் பலத்த சேதமடைந்தது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் தம்மாம் நகரில் உள்ள எண்ணெய் கிணறுகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு ஏவுகணை வீசப்பட்டது. எனினும் சவுதி கூட்டுப்படைகள் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் இந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்துத் தாக்கி அழித்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வீடுகள் சேதம்; சிறுவர்கள் காயம்
எனினும் ஏவுகணையின் சிதைவுகள் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்தன. இதில் அங்குள்ள 14 வீடுகள் சேதமடைந்தன. மேலும் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்ட அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களான ஜிசான் மற்றும் நஜ்ரான் நகரங்களை நோக்கி பல ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவை இடை மறித்து அழிக்கப்பட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தெரிவித்தன.இந்த ஏவுகணை தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதல்களை நடத்தியதாக சவுதி கூட்டு படைகள் குற்றம் சாட்டியுள்ளன.

சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கு உட்பட்டு...
இதுகுறித்து சவுதி அரேபியா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சவுதி அரேபியாவின் நிலங்களையும் திறன்களையும் பாதுகாக்க தேவையான மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும். மேலும் பொதுமக்களை பாதுகாக்க, இதுபோன்ற விரோத மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்த சர்வதேச மனித உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

Next Story