ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் பலி


ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் பலி
x
தினத்தந்தி 5 Sep 2021 6:23 PM GMT (Updated: 5 Sep 2021 6:23 PM GMT)

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை அமெரிக்க படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஒடுக்கியது.

அதனை தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு ஈராக் அறிவித்தது. ஆனால் சமீப காலமாக அங்கு மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பாக்தாத் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் கிர்குக் மாகாணத்தில் தல் அல் ஸ்டீஹ் என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை போலீசார் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த ஜ.எஸ். பயங்கரவாதிகள் போலீசாரின் வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Next Story