ஏமன் உள்நாட்டு போர்: வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் பலி - ஐ.நா. தகவல்


ஏமன் உள்நாட்டு போர்: வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் பலி - ஐ.நா. தகவல்
x
தினத்தந்தி 8 Sep 2021 8:09 PM GMT (Updated: 8 Sep 2021 8:09 PM GMT)

ஏமன் உள்நாட்டு போரில் வான்வெளி தாக்குதலில் மட்டும் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

சனா,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டு போரில் வான்வெளி தாக்குதலில் மட்டும் இதுவரை பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏமனில் தினமும் சராசரியாக 10 வான்வெளி தாக்குதல் நடப்பதாகவும், 2015 மார்ச் மாதம் முதல் 23 ஆயிரம் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் வறுமை, பசி மற்றும் அடிப்படை வசதியின்மையால் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Next Story