ஆப்கானிஸ்தானில் வீதிகளில் இறங்கி எதிர்ப்பாளர்கள் போராட்டம் கூட்டத்தை கலைக்க தலீபான்கள் துப்பாக்கிச்சூடு


ஆப்கானிஸ்தானில் வீதிகளில் இறங்கி எதிர்ப்பாளர்கள் போராட்டம் கூட்டத்தை கலைக்க தலீபான்கள் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 9 Sep 2021 6:16 PM GMT (Updated: 9 Sep 2021 6:16 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அச்சுறுத்தலை மீறி எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது.

அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைத்துள்ளனர்.

இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பெண்கள் போராட்டம்

பெண்கள் இடம் பெறாததால், இடைக்கால அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் பெண்கள் போராட்டம் நடத்தினர். “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என அவர்கள் கோஷமிட்டனர். “எந்த அரசும் பெண்கள் இருப்பை மறுக்க முடியாது, சுதந்திரத்துக்காக நான் மீண்டும் மீண்டும் பாடுவேன்” என்பது போன்ற வாசகங்கள் கொண்ட கோரிக்கை அட்டைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

அவர்கள் மீது தலீபான்கள் கசையடியும், தடியடியும் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது தலீபான்கள் தாக்குதலில் காயம் அடைந்த பத்திரிகையாளர்கள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர்கள் காபூலில் கைதான பின்னர் தலீபான்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சுறுத்தலைமீறி போராட்டம்

நீதித்துறையால் அங்கீகரிக்கப்படாத போராட்டங்களை தலீபான்கள் தடை செய்துள்ளனர். மக்கள், வீடுகளுக்குள் முடங்கி இருக்குமாறு அவர்கள் அச்சுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளிலும் தலீபான்களின் எச்சரிக்கையையும், தடையையும் பொருட்படுத்தாமல் எதிர்ப்பாளர்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினர்.

தலைநகர் காபூலில் பாகிஸ்தான் தூதரகம் அருகே ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள், “ எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று கோஷங்களை முழங்கினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய தலீபான்கள்

அவர்கள்மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பர்வான், நிம்ரூஸ் மாகாணங்களிலும் அதிக அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள், “ எங்களது குரலை ஆயுதத்தால் அமைதிப்படுத்த முடியாது” என கோஷமிட்டனர்.

இந்த போராட்டங்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மன்னிப்பு கேட்டார் அஷரப் கனி

இதற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஓடியதற்காக முன்னாள் அதிபர் அஷரப் கனி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “ காபூலில் இருந்து வெளியேற நான் எடுத்த முடிவு என் வாழ்வின்மிக கடினமான முடிவு. அதை வேறு வகையில் முடிவுக்கு கொண்டு வர முடியாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன். மக்களை கைவிடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story