இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்


இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:47 PM GMT (Updated: 9 Sep 2021 9:47 PM GMT)

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது.

ஜெருசலேம்,

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதால், அவர்களை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடிய பாலஸ்தீன கைதிகள் மேற்கு கரையில் அமைந்துள்ள ஜெனின் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள முகாம்களில் கைதிகளின் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இதனால், அவர்களை சந்திக்க சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மேற்கு கரையின் ஜெனின் பகுதியில் வசித்துவரும் தப்பியோடிய கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி அதில் சிலரை கைது செய்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச்சென்றதை மேற்குகரையில் உள்ள பாலஸ்தீனர்கள் கொண்டாடினர். மேலும், சிறையில் இருந்து தப்பியவர்களின் உறவினர்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்ததை கண்டித்தும், கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பியதை ஆதரித்தும் காசாமுனையில் பாலஸ்தீனர்கள் நேற்று பேரணி நடத்தினர். அப்போது, இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீனர்கள் கற்கல் மற்றும் பிற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Next Story