ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்


ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:22 PM GMT (Updated: 2021-09-12T02:52:34+05:30)

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் ஒன்றை வீசினர். எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ராக்கெட்டை நடு வானிலேயே இடைமறித்து அழித்தது. இதைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது.‌

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகரில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹமாஸ் போராளிகளின் ஆயுதக்கிடங்கு, துப்பாக்கி பயிற்சி மையம் மற்றும் ராணுவ வளாகம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டன. காசாவில் இருந்து வரும் எந்த ஒரு தாக்குதலுக்கும் ஹமாஸ் போராளிகளை பொறுப்பேற்க வைப்போம்’’ என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த வான் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை.

Next Story