ஆப்கானிஸ்தானில் புதிய கல்வி கொள்கையை வெளியிட்ட தலீபான்கள்


ஆப்கானிஸ்தானில் புதிய கல்வி கொள்கையை வெளியிட்ட தலீபான்கள்
x
தினத்தந்தி 12 Sep 2021 5:26 PM GMT (Updated: 12 Sep 2021 5:26 PM GMT)

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான் உயர் கல்வி மந்திரி அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்தனர். தற்போது அவர்கள் அங்கு புதிய இடைக்கால அரசை அமைத்துள்ளனர். தலீபான்களின் முந்தைய ஆட்சியில் (1996-2001) பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே வரக்கூடாது; உடலை முழுமையாக மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும்; கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல அனுமதி கிடையாது என பெண்களை வீட்டுக்குள் முடக்கும் பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன.

ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு சம உரிமை இவற்றை மீறும் பெண்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளாகினர். எனவே ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதுமே அங்குள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்தன. ஆனால் கடந்த முறையை போல் இல்லாமல் தங்களின் தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தலீபான்கள் அறிவித்தனர். எனினும் ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டே பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று தலீபான்கள் கூறியிருப்பது பெண்களின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.‌

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட வாய்ப்பு
இதனிடையே ஆப்கானிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தலீபான்கள் வகுப்புகளில் மாணவர்கள், மாணவிகளை தனித் தனியாக பிரித்து இரு தரப்பினருக்கும் இடையே திரையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தலீபான்களின் இந்த கட்டுப்பாடுகளால் பெண்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக யுனெஸ்கோ அச்சம் தெரிவித்தது. குறிப்பாக, இருபாலர் கல்வி, பெண்களுக்கு ஆண் ஆசிரியர்கள் கற்பிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதால், உயர் கல்வியில் பெண்கள் சேர்வது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் யுனெஸ்கோ தெரிவித்தது.

இருபாலர் கல்விக்கு அனுமதி கிடையாது
இந்த நிலையில் தலீபான் அரசின் உயர்கல்வி மந்திரி அப்துல் பாக்கி ஹக்கானி உயர்கல்வி தொடர்பான புதிய கொள்கைகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் தலைநகர் காபூலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.‌

அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் முதுகலை பட்டங்கள் வரையிலும் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். ஆனால் பாலின ரீதியாக பிரிக்கப்பட்ட வகுப்பறையில் மட்டுமே பெண்கள் படிக்க முடியும். அதாவது பல்கலைக்கழகங்களில் இருபாலர் கல்விக்கு அனுமதி கிடையாது. அதோடு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும்.‌

இவ்வாறு அப்துல் பாக்கி ஹக்கானி கூறினார்.

Next Story