ஆப்கானிஸ்தானில் தலீபான் தலைவர்களுக்கு இடையே மோதல் ; அதிபர் மாளிகையில் குழப்பம்


Image courtesy : REUTERS
x
Image courtesy : REUTERS
தினத்தந்தி 15 Sep 2021 6:03 AM GMT (Updated: 15 Sep 2021 7:16 AM GMT)

ஆப்கானிஸ்தான் புதிய இடைக்கால மந்திரி சபையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தலீபான்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது.

காபூல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

இந்த புதிய அரசில் தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களின் புதிய இடைக்கால மந்திரி சபையில்  பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தலீபன்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் புதிய அரசு தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார்.

அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தலீபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முல்லா கனி பரதர், ஆனஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான். ஆனாலும் ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் அனுதாபி என்பதால் அவரை அதிபராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதை பரதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு அதிபரை  தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தலீபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்துல் கனி பராதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தாலிபன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தாலிபன்கள் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர்.

மோதல் தொடர்பாக தலீபான்கள் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு தங்களது நிறுவனரான முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும், அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் தலீபான்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.

பரதர் காபூலுக்குத் திரும்பி, வாக்குவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று கேமராக்கள் முன் தோன்றிக் கூறுவார் என வேறு சிலர் கூறுகின்றனர்.

இதுவரை பொதுவெளிக்கு வராத தலீபான்களின் அதிதலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பல ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தலீபான்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் ஆவார்.

Next Story