டென்மார்க்கில் கொடூரம் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,400 டால்பின்கள்


டென்மார்க்கில் கொடூரம் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,400 டால்பின்கள்
x
தினத்தந்தி 15 Sep 2021 6:19 PM GMT (Updated: 15 Sep 2021 6:19 PM GMT)

டென்மார்க்கில் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற வேட்டைக்காரர்கள் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்து கொன்று குவித்தனர்.

கோபன்ஹேகன்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கலம் மற்றும் டால்பின்களை வேட்டையாடுகின்றனர்.

உலகம் முழுவதிலுமிருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது, இயற்கையிலிருந்து உணவு சேகரிப்பதற்கான நிலையான வழி மற்றும் தங்களின் கலாசார அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதி என்று வேட்டைக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் இந்த பாரோ தீவுகளில் கிரைண்ட் என்றும் அழைக்கப்படும் டால்பின்களை வேட்டையாடும் பாரம்பரிய திருவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற வேட்டைக்காரர்கள் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த டால்பின்கள் அனைத்தையும் கொடூரமாக கத்தியால் அறுத்து கொன்று குவித்தனர். இதனால் கடற்கரை பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதனிடையே பாரோ தீவுகளில் இதுவரை நடந்த வேட்டையில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story